சிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்!

விட்டுக்கொடுக்காத நண்பர்கள் இருவரின் வாழ்வில் நிகழும் காதல், மோதல், காமெடி கலாட்டா, உறவுகளின் சண்டைகள், ஒரு டெம்ப்ளேட் ட்விஸ்ட் போன்றவற்றை வைத்து களத்தில் குதித்திருக்கிறது இந்த ‘களத்தில் சந்திப்போம்’. படம் எப்படியிருக்கிறது? ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

களத்தில் சந்திப்போம்

அமைதிப்படை ஜீவாவும் அதிரடிப்படை அருள்நிதியும் நண்பர்கள். ஆனால் இவர்கள் எதிரெதிர் துருவங்கள். கபடியில் கூட எதிரெதிர் அணிகள்தான். அருள்நிதிக்கு முறைப்பெண்ணான மஞ்சிமா மோகனைத் திருமணம் செய்துவைக்க அவரின் அம்மா நினைக்க, ஜீவா செய்த விளையாட்டு வினையாகி திருமணம் பாதியில் நிற்கிறது. பல களேபரங்களுக்குப் பிறகு செய்த தவற்றைச் சரி செய்ய மஞ்சிமாவை அருள்நிதியுடன் சேர்த்துவைக்க ஜீவா முற்பட, இந்த முறை அருள்நிதியே திருமணம் வேண்டாமென மறுக்கிறார். ஏன், எதற்கு என்பதை யூகிக்கக்கூடிய ட்விஸ்ட்கள், காமெடி, பிசிரடிக்காத நடிப்பு, கலகலப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

‘ஆண்பாவம்’, ‘வெற்றிவிழா’, ‘சின்னத்தம்பி பெரியதம்பி’ என்று ஹிட் ஆன டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களைப் பார்த்து எவ்ளோ நாளாச்சு! நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படி ஒரு கலகலப்பான டபுள் ஹீரோ படம். நண்பனுக்காக உயிரையும் கொடுப்பது, நண்பனின் காதலைச் சேர்த்துவைப்பது என்று வழக்கமான ரூட்டைதான் எடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜசேகர். ஆனால், சின்ன சின்ன சுவாரஸ்ய சம்பவங்கள் மூலம் பழைய பாதையின் பள்ளம் தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

களத்தில் சந்திப்போம்

கலகலப்பான பக்கத்து விட்டுப் பையன் வேடம் என்பதால் ஜீவாவுக்கு இது அசால்ட் அல்வா! முதல் பாதியில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து கலகலப்பூட்டியிருக்கிறார். கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் மென்சோகம், கொஞ்சம் ஜாலி கேரக்டர் அருள்நிதிக்கு. முதல்பாதி முழுதும் ‘இவர்தான் ஹீரோவோ’ என்று நினைக்கவைக்கும் அளவுக்கு ஆக்‌ஷன் மற்றும் ஆக்டிங் காட்சிகளில் அருள்நிதிக்கே முக்கியத்துவம்! இரண்டு நாயகிகளில் ஓரளவுக்குத் தேறுவது மஞ்சிமா மோகன்தான். முதல்பாதி முழுக்க வரவே வராத பிரியா பவானி சங்கர், இரண்டாம் பாதியில் வெறுமனே வந்துபோயிருக்கிறார்.

ரோபோ சங்கர் – பாலசரவணன் காமெடி ஒன்லைனர்கள் சிரிக்கவைக்கின்றன! அதிலும் பாலசரவணனின் காமெடிகள் பலே! சீரியஸான காட்சிகளிலும் கலாய்க்கும் ஒன்லைனர்கள் பலகாட்சிகளில் சிரிக்க வைத்தாலும் சில காட்சிகளில் மட்டும் உறுத்துகிறது. இருந்தும் படத்தை எங்கும் தொய்வில்லாமல் கொண்டு செல்வது அவர்களின் நகைச்சுவைதான். கூடவே சீனியர் ராதாரவியையும் காமெடி கோதாவில் இறக்கிவிட்டு கிச்சு கிச்சு மூட்டியிருக்கிறார்கள். இளவரசு, ‘ஆடுகளம்’ நரேன், வேல ராமமூர்த்தி ஆகியோர் இதுவரையிலான சினிமாக்களில் எப்படிப்பட்ட அப்பாக்களாக நடித்தார்களோ அப்படிப்பட்ட அப்பாக்களாக மட்டுமே வந்துபோகிறார்கள்.

களத்தில் சந்திப்போம்

சீரியஸான காட்சிகளிலும் கலகலப்பான காட்சிகளிலும் பெரிதும் பலம் சேர்ப்பது டான் அசோக்கின் வசனங்கள். முழுமைபெறாத கதாபாத்திரங்களின் தன்மையை நமக்குப் புரியவைக்கவும் அது பெரிதும் உதவியிருக்கிறது. ஆங்காங்கே கதையின் போக்கில் உறுத்தாமல் வரும் அரசியல் நையாண்டிகள் அட்டகாசம். ஆனால், இப்படிப் பல இடங்களில் முற்போக்காக யோசித்தவர்கள், பெண் பார்க்கும் காட்சியில் இடம்பெறும் வழக்கமான உருவகேலி காமெடியைத் தவிர்த்திருக்கலாமே?!

படம் முடிந்த ஃபீல் வந்தபிறகும் கூட வாலன்டியராக இன்னொரு காதலையும் சேர்த்துவைப்போம் என அடம்பிடித்து நம்மை உட்கார வைத்திருக்கிறார்கள். கபடிப் போட்டிகள் காட்சிப்படுத்தப்பட்ட விதம் அருமை என்றாலும் அதற்குக் கதையில் வேண்டிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

களத்தில் சந்திப்போம்

யுவன்ஷங்கர் ராஜா இசை என்பதை நாம் கிட்டத்தட்ட மறந்துவிட்ட நேரத்தில் தன் குரலால் ஒரு பாட்டுப்பாடி நினைவுபடுத்துகிறார். மற்றபடி, அவரின் பழைய மேஜிக்குக்கு நாம் இன்னமும் காத்திருக்க வேண்டும்போல! அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவில் கபடி காட்சிகளில் அனல் பறக்கிறது. தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பு பக்கா பேக்கேஜான ஒரு மசாலா படத்துக்கு வேண்டியதைச் செய்திருக்கிறது.

பழகிய ஃபார்மேட்டில் ஒரு ஜாலியான படம் பார்க்கலாம் என்று நினைத்தால் இந்தக் களத்தில் தாராளமாக இறங்கிப்பார்க்கலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *