தை அமாவாசை : ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள் – அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தர்ப்பணம் | Thai Amavasai : Holy Bathing in the Rameswaram Agni Tirtham

News

oi-Jeyalakshmi C

|

ராமநாதபுரம்: தை அமாவாசையை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் ராமேஸ்வரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

நம்முடன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.

அவரவர்கள் வசதிக்கேற்ப தங்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிலோ அல்லது நதிக்கரைகளுக்கோ சமுத்திரக் கரைகளுக்கோ சென்று முன்னோருக்குச் செய்யவேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் விட்டு வேண்டிக்கொள்வது அவசியம். தை அமாவாசை தினத்தில் புண்ணிய ஸ்தலங்களுக்கு வருவதால் சகல ஐஸ்வரியமும் கிடைக்கப்பெறும் என்பது மக்களின் நம்பிக்கை.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக ஆடி மற்றும் மகாளய அமாவாசையின்போது கடலில் நீராட அனுமதி வழங்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்திருந்தனர்.

இந்த நிலையில், அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடுவதற்கான தடையை சமீபத்தில் மாவட்ட நிர்வாகம் நீக்கி உத்தரவிட்டிருந்தது. அதேபோல், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 21 தீர்த்தங்களில் நீராடவும் அனுமதி வழங்கப்பட்டது.

ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் ராமேஸ்வரத்தில் குவிந்தனர். அக்னி தீர்த்த கடலில் நீராடிய மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ராமநாதசுவாமி கோவிலுக்குள் 21 தீர்த்தக்களிலும் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *