தை அமாவாசை 2021 : முன்னோர்களை ஏன் வணங்க வேண்டும் – தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம் | Thai Amavasai 2021: Auspicious time for offering prayers to ancestors in Thai Amavasai
News
oi-Jeyalakshmi C
சென்னை: பித்ருகளுக்கு தர்ப்பணம் பூஜை செய்யாதவர்கள் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகின்றனர். அப்படி சாபம் பெற்றவர்களின் வீடுகளில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாளான தை அமாவாசை வியாழக்கிழமை பிப்ரவரி 11ஆம் தேதி வருகிறது. இந்த நாள் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு அவர்களின் ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயாண புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூவுலகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனே இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம். வியாழக்கிழமை தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

முன்னோர்களை வழிபட்டால் என்ன நன்மை
இப்பூமியில் உள்ள உயிர்களிலேயே உயர்ந்த பிறவியாக கருதப்படுவது மனிதப் பிறவி. மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் 9ஆம் பாவம் எனப்படும் பாக்ய ஸ்தானத்தினால்தான் தீர்மானம் செய்யப்படுகிறது. அந்த ஸ்தானம் வலிமை பெற்றவர்கள் சாதிக்க பிறந்தவர்கள். பாக்ய ஸ்தானத்தை வலிமைப்படுத்த பிரபஞ்சம் வழங்கிய மாபெரும் கொடைகள் இரண்டு. ஒன்று பித்ருக்கள் பூஜை, மற்றொன்று குலதெய்வ வழிபாடு.

தர்ப்பணம் செய்யலாம்
தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும். இல்லத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நடைபெறும். நீண்டநாளாக வருத்தி வந்த நோய் அகலும். மனக்கலக்கம் விலகும், மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

பித்ரு லோகத்தை அடையும் தர்ப்பணம்
அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது.

சூரியன் மூலம் தர்ப்பணம் சேரும்
அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு இரு கைகளாலும் நீர் விடும் அர்க்கியம் செய்வது மிகுந்த நன்மை தரும். கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளையும் பூரணமாக பெறலாம். முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர் என்று சொல்வார்கள். அவர்களுக்கு செய்யும் தர்ப்பண பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் சூரியன் வழங்குகிறார். அந்த தேவதைகள் மறைந்த முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன என்பது ஐதீகம்.

எள் தர்ப்பணம்
இறைவன் மகாவிஷ்ணு ராமபிரானாக மனித அவதாரம் எடுத்த போது தனது தந்தைக்கு பித்ரு கடன் நிறைவேற்றியுள்ளார். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ராமபிரானிடம் கூறியதன் அடிப்படையில் ராமர், தசரதருக்கும், ஜடாயுவுக்கும் எள் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. திருப்புல்லாணி, ராமேஸ்வரம், கோடியக்கரை, பூம்புகார், திருவெண்காடு, திருச்சி அம்மா மண்டபம், திருச்செந்தூர், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பவானி கூடுதுறை போன்ற தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கலாம்.

திதி கொடுக்க நல்ல நேரம்
பிப்ரவரி 10 இன்று இரவு 01 மணி முதல் பிப்ரவரி 11 நள்ளிரவு 12. 35 மணி வரை அமாவாசை திதி உள்ளது. எனவே நாளைய தினம் நம்முடைய முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவும், அவர்களை வழிபடவும் மிகச்சிறந்த நாளாகும். ராகு காலம் எமகண்டம், குளிகை நேரம் தவிர பிற நேரங்களில் திதி கொடுக்கலாம். இதன் மூலம் நமக்கு ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும் சுப காரியங்கள் நடைபெறும்.