நெட்ஃபிளிக்ஸில் ‘ஜகமே தந்திரம்’, நேரடி வெளியீடு!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படம் கடந்த ஆண்டு மே மாதமே திரைக்கு வரவிருந்த நிலையில், கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு திரையரங்கங்கள் மூடப் பட்டதால், ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம், இந்தத் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகலாம் என்ற அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜகமே தந்திரம்

ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில் பிப்ரவரி 12-ல் தியேட்டர்களில் படம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், ஓடிடி-யில் படத்தை வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில்தான் இன்று ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், நெட்ஃபிளிக்ஸ் ‘ஜகமே தந்திரம்’ படத்தை ‘கர்ணன்’ படத்துக்கு முன்பாக அதாவது மார்ச் 26-ம் தேதி ரிலீஸ் செய்யும் எனத் தெரிகிறது. ‘கர்ணன்’ படம் ஏப்ரல் 9-ம் தேதி தியேட்டர்களில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘ஜகமே தந்திரம்’ படத்தை தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறது நெட்ஃபிளிக்ஸ். இதற்கானப் பணிகள் இப்போது முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. Y Not ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்ய லஷ்மி, கலையரசன், ஜோஜோ ஜார்ஜ் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ எனப்பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நராயணன் இசையமைத்துள்ளார்.

‘ஜகமே தந்திரம்’ ஓடிடி ரிலீஸுக்கு நடிகர் தனுஷும், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். தியேட்டர்கள் முழுமையாகத்திறக்கப்பட்டு, 100 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் தியேட்டர்களில்தான் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என தனுஷ் வெளிப்படையாகவே ட்வீட் செய்தார். ஆனால், அந்த எதிர்ப்பையும் மீறி தயாரிப்புத்தரப்பு நெட்ஃபிளிக்ஸில் படத்தை ரிலீஸ் முடிவை எடுத்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *