மாசித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம் – சித்திரை வீதிகளில் உலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் | Madurai Masi Festival 2021: Meenakshi Sundareswarar strolling the streets of Chithirai
Astrology
oi-Jeyalakshmi C
மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் மாசி மகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த திருவிழா 48 நாட்கள், நடைபெறும். தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மாசி மண்டல திருவிழா தான் அதிக நாட்கள் நடைபெறும் திருவிழாவாகும். தை பூசத்தை முன்னிட்டு மாரியம்மன் தெப்பத்திருவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து மீனாட்சியம்மன் கோயிலில் மாசி மகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
விழாவை முன்னிட்டு கோயிலில் எட்டு திசையிலும் உள்ள கொடிமரத்தில் விழாவுக்கான கொடி ஏற்றப்படுவது முக்கியத்துவமானது. மற்ற விழாக்களில் தங்க கொடி மரத்தில் மட்டும் கொடி ஏற்றப்படும்.
இந்த ஆண்டு மாசி திருவிழா நேற்று தொடங்கியது. இதனையொட்டி சுவாமி சன்னதி 2ஆம் பிரகாரத்தில் 8 இடங்களில் சுற்று கொடியேற்றம் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கி 10 மணி வரை நடைபெற்றது.

கொடிமரம் முன்பு மீனாட்சி சுந்தரேசுவரர் பிரியாவிடை உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினார்கள். அங்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் தினமும் காலை, இரவு என இரு வேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
27ஆம் தேதி தேதி மாசி மகம் தினத்தன்று மீனாட்சி, சுந்தரேசுவரர் பிரியாவிடை அம்மனுடன் ஆலயத்தில் இருந்து கிளம்பி சித்திரை வீதி வழியாக, கீழமாசி வீதி, யானைக்கல், வடக்கு வெளிவீதி வழியாக சிம்மக்கல் வைகை ஆற்றின் தென்கரை திருமலைராயர் படித்துறை பகுதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தளுவார்கள். அங்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வைணவ தலங்களில் மாசி மகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிமரம் அருகே சக்கரபாணி பெருமாள், சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயார்களுடன் எழுந்தருளினார். அப்போது கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
வரும் 25ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. 26ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மாசிமக தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை காவிரி சக்கரபடித்துறையில் சக்கரராஜா தீர்த்தவாரி நடக்கிறது. இதேபோல் கும்பகோணம் ராஜகோபாலசாமி கோவில், ஆதிவராக பெருமாள் ஆகிய வைணவ தலங்களிலும் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.