விஷாலின் வாழ்வா சாவா பிரச்னை… 'சக்ரா' ரிலீஸாகுமா?! #Chakra
எம்எஸ் ஆனந்தன் எனும் அறிமுக இயக்குநர் இயக்க, விஷால் தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘சக்ரா’. ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா கெசண்ட்ரா ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இப்படம் பிப்ரவரி 19 ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்னும் இருதினங்களில் ரிலீஸ். ஆனால், படம் ரிலீஸாவதில் சிக்கல் நீடிக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். விஷாலின் முந்தையைப் பட தோல்விகள் மற்றும் அவர் வாங்கிய கடன்களால் ரிலீஸில் பிரச்னையாவதாக சொல்லப்படுகிறது.
சக்ரா படம் கடந்த ஆண்டு மே மாத ரிலீஸுக்கு தேதி குறிக்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்தில் படம் ரீலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு தற்போது பிப்ரவரி 19 ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
”விஷாலின் முந்தையப் படங்கள் மற்றும் கடன் நெருக்கடிகளால் ரிலீஸில் பிரச்னை இருப்பது உண்மைதான். ஆனால், படம் திட்டமிட்டபடி பிப்ரவரி 19-ம் தேதி ரிலீஸாகும். விஷாலுக்கு இது வாழ்வா சாவா பிரச்னை. அதனால், அவர் எல்லா சிக்கல்களையும் சமாளித்துக்கொண்டிருக்கிறார். பிரச்னைகள் முடிந்துவிடும். ஆந்திரா, தெலுங்கானாவில் 650 திரையரங்குகள், இந்தியில் 150 திரையரங்குகளில் படம் ரீலீஸாகிறது. தமிழ்நாட்டிலும் நிச்சயம் படம் ரிலீஸாகிவிடும்” என்கிறார்கள் விஷாலுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
விஷாலின் கடன் பிரச்னைகள் மற்றும் கோலிவுட்டில் அவருக்கு இருக்கும் எதிர்ப்புகள் ‘சக்ரா’ பட ரிலீஸில் தொடர்ந்து பிரச்னையை உண்டாக்கும் என்றே தெரிகிறது.